தேனி மாவட்ட கோயில்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை
தேனி, ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. நீர்நிலைகளில் பெண்கள் திருமாங்கல்யம் மாற்றிக்கொண்டனர். குல தெய்வ வழிபாடும் நடந்தது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடந்தன. தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில், வேல்முருகன் கோயிகளில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வீரபாண்டி முல்லைபெரியாற்றில் பெண்கள் புதிதாக திருமாங்கல்யம் மாற்றிக் கொண்டனர்.
கம்பம்: மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் சுருளி அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக இருந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இங்குள்ளவேலப்பர் கோயில், பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். ஏராளமான பெண்கள் சுருளி ஆற்றில் விளக்கு ஏற்றி மிதக்க விட்டனர்.
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக ஆற்றில் பெண்கள் விளக்கு ஏற்றி மிதக்கவிட்டனர்.கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில்,சாமாண்டியம்மன் கோயில், கவுமாரியம்மன் கோயில், வேலப்பர் கோயில்உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
கூடலுார்: சுருளியாறு மின்நிலையம் ரோட்டில் உள்ள மங்களநாயகி கண்ணகி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. கண்ணகிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி வழங்கப்பட்டது. பெண்களுக்கு குங்குமம், வளையல் வழங்கப்பட்டது. ஆடிப்பெருக்கை முன்னிட்டுகருப்பசாமிக்கு படையல் வைத்து ஊர்வலமாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
-*அங்காளபரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
*-கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே காளியம்மன் கோயில், துர்க்கையம்மன் கோயில், கூடல் சுந்தரவேலவர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சின்னமனுார்: சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிவகாமியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெண்கள் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை பழ விளக்கேற்றி வழிபட்டனர். உபயதாரர்கள் சார்பில் அவர்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. கோயிலில் அர்ச்சகர் பணியிடம் காலியாக இருப்பதால் அம்பாள் சன்னதியில் மட்டும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமி சன்னதியில் பூஜைகள் நடக்காததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆண்டிபட்டி வைகை அணையில் மீனவர்கள் சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. வைகை அணை நீர் தேக்கப்பகுதியில் காவல் தெய்வம் முனீஸ்வரன் சுவாமிக்கு பொங்கலிட்டு, கிடாவெட்டி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வைகை அணை நிரம்பவும், மீன்வளம் பெருகவும் வேண்டி வைகை அணை, கரட்டுப்பட்டி, பெருமாள்கோயில்பட்டி, வில்லானியாபுரம், சின்னக்காமக்காபட்டி, பெரியகாமக்காபட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மீனவர்கள், வியாபாரிகள் உட்பட பலர் வழிபாடு செய்தனர்.
* மாவூற்று வேலப்பர் கோயிலில் நடந்த விழாவில் வேலப்பருக்கு சிறப்பு அபிேஷகங்கள், ஆராதனைகள் நடந்தது. காவல் தெய்வம் கருப்பசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
----------பெரியகுளம்: கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில், அம்மன் வளையல் அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு மங்கல்யம், மஞ்சள் , கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா பள்ளி சார்பில், நகராட்சி முன்னாள் தலைவர் ஓ.ராஜா, பள்ளி நிறுவனர் சசிகலாவதி, தாளாளர் ஐஸ்வர்யா செய்திருந்தனர். குருதட்சிணா மூர்த்தி சேவா சங்கம் ஆலோசகர் சரவணன், திரவியநாதன், முன்னாள் ஆசிரியர் குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
* பெரியகுளம் மாரியம்மன், திரவுபதிஅம்மன், பள்ளத்து காளியம்மன், தண்டுப்பாளையம் காளியம்மன் கோயில்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பாலசுப்பிரமணியர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதி படித்துறையில் புதிதாக தாலி மாற்றிக்கொண்டனர். நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் அதிகாலை 4:30 மணி முதல் இரவு 10:30 வரை, அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனம் மற்றும் ராதே கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கிருஷ்ணசைதன்யதாஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். ஏற்பாடுகளை குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் செய்திருந்தனர்.
*கைலாசபட்டி, கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தாமரைக்குளம் சீலைக்காரி அம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கு திருவிழா நடந்தது. அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு, கரகம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்டவைகள் நடந்தது. ஏற்பாடுகளை வாணியர் சங்கம் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பெரியகுளம், தாமரைக்குளம், வடுகபட்டி, லட்சுமிபுரம், டி.கள்ளிப்பட்டி, கைலாசபட்டி பகுதிகளில் குலதெய்வம் வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
போடி: -போடி காசிவிஸ்வநாதர் கோயில் அருகே கொட்டகுடி ஆற்றுப்பகுதியில் மஞ்சள் மாவால் ஆன அம்மன் சிலைகள் செய்து வழிபட்டனர். மஞ்சள் நுாலில்
பெண்கள் தாலி நுால் மாற்றி கொண்டனர். போடி அருகே கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், மலைமீதுள்ள வடமலைநாச்சியம்மன் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயில், போடி மேலத்தெரு சவுடேஸ்வரி அம்மன், நந்தவனம் காளியம்மன், சாலைக்காளியம்மன், புதுக்காலனி ஆதிபராசக்தி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.