உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி பெண்கள் பிரார்த்தனை

மழை வேண்டி பெண்கள் பிரார்த்தனை

ஊத்துக்கோட்டை:போதுமான அளவு மழை பெய்யாததால், வறண்ட நிலையில் காணப்படும் ஏரியில் விளக்கேற்றி, பெண்கள் வருண பகவானை வேண்டினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால், நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அணைகள், ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், திருவள்ளூர் மாவட்டங்களில் போதுமான அளவு மழை பெய்ய வில்லை. இதனால் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதார மான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட அணைகள், ஏரி, குளம், குட்டை ஆகியவை மழைநீரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை, பூண்டி ஒன்றியங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகள் முயற்சி எடுத்து பொதுமக்களுக்கு பற்றாக்குறை இல்லாத அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இது எத்தனை நாள் நீடிக்கும் என்பது கேள்விக்குறி. இந்நிலையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, ரெட்டித் தெருவில் உள்ள பெண்கள், அங்குள்ள அங்காளம்மன், சப்த கன்னியர், எல்லையம்மன், செல்லியம்மன் ஆகிய கோவில்களில் விளக்கேற்றி மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். பின், ஏரியின் மையப் பகுதிக்குச் சென்று விளக்கு வைத்து, பெண்கள் வருண பகவானை வேண்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !