சென்னை முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில், ஆடி கிருத்திகை விழா நேற்று, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அலகு குத்தி, பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். முருகப்பெருமானுக்கான பிரதான விழாக்களில் ஒன்றாக கருதப்படும் ஆடி கிருத்திகை விழா, முருகன் கோவில்களில், நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், விடியற்காலை முதல் இரவு வரை, பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடந்தன. மூலவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரங்களும் செய்யப்பட்டு, லட்சார்ச்சனை, இரவு திருவீதிஉலா ஆகியனவும் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிரமமின்றி, வழிபட வசதியாக, கட்டண தரிசனத்திற்கும், சர்வ தரிசனத்திற்கும் அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் பக்தர் குழுவினர் சார்பில், அன்னதானம், நீர் மோர் தானம் ஆகியவை வழங்கப்பட்டன.
வடபழனி: வடபழனி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. அப்போது பக்தர்கள் தரிசனம் துவங்கியது. அதிகாலை முதலே பக்தர்கள், வடபழனி முருகன் கோவிலுக்கு வர துவங்கி, நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். பெண் பக்தர்கள் பலர், அகல் விளக்கு ஏற்றி, பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இரவு, 10:00 மணிக்கு, வள்ளி - தேவசேனா சமேதருடன், சுப்ரமணிய சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
குன்றத்துார்: சென்னை அருகே குன்றத்துார் மலை மீது சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவிலிலாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நேற்று, ஆடிக் கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடந்தது. சுவாமியை பக்தர்கள் தரிசிக்க வசதியாக, சிறப்பு, தனி, பொது தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக, பிராட்வே, பூந்தமல்லி, வடபழனி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து, மாநகர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இக்கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தங்க முலாம் பூசிய கவசம், புஷ்ப அலங்காரம், சோடச தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில், பால், புஷ்பம், பன்னீர் காவடிகள் ஏந்தியும், அலகு குத்தியும், பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவில், மாடவீதியில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
எர்ணாவூர்: எர்ணாவூர், திருமுருகன் ஆலயத்தில் நேற்று காலை, 6:00 மணிக்கு, வேலுக்கு அபிஷேகம், துாப, தீப ஆராதனை நடைபெற்றது. பின், எர்ணாவூர் கிரிஜா நகர், விநாயகர் கோவிலில் இருந்து, 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி சுமந்து அணி வகுத்தனர். அதேபோல, சென்னை, கந்தக்கோட்டம், பெசன்ட் நகர் அறுபடை வீடு, குமரக்கோட்டம், திருப்போரூர், சிறுவாபுரி, வல்லக்கோட்டை உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.