கடம்பவன முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விமரிசை
கடம்பத்துார்: கடம்பத்துார் பகுதியில் அமைந்துள்ள கடம்பவன முருகன் கோவிலில், நேற்று, ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, பால்குட அபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் அடுத்த, வெண்மனம்புதுார் பகுதியில் அமைந்துள்ளது கடம்பவன முருகன் கோவில். இந்த ஆண்டு, 4ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா, 3ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின், தினமும் அபிஷேகமும், ஆராதனையும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலையில் சங்காபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று, ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு சூரியம்மன் கோவிலிலிருந்து துவங்கிய பால்குட ஊர்வலம், காலை, 11:00 மணியளவில் கோவிலை வந்தடைந்தது. அதன் பின், கடம்பவன முருகனுக்கு பாலாபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடந்தது. அதன் பின், மாலை, 6:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத கடம்பவன முருகனுக்கு ஒய்யாலி சேவையும் நடந்தது. இதில், கடம்பத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.