சேலம் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
சேலம்: ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம், குகை, மாரியம்மன், காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருவிழா,கடந்த 24ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று, பொங்கல் வைபவம், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, அக்னி குண்டம் தயார் செய்யப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, சூரர்களை சம்ஹாரம் செய்த காளியம்மனுக்கு, மஞ்சள்பாவாடை கொண்டு வந்து பூஜை நடந்தது. மாலை, 3:30 மணிக்கு, காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர், வரிசையில் நின்று, குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அப்போது, ஓம் சக்தி தாயே என, முழக்கமிட்டனர். சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வைபவம், நேற்று நடந்தது. ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவால், பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால், காலை, பொங்கல் வைக்க வருவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 9:00 மணிக்கு பின், இரு, நான்கு சக்கர வாகனங்களில், பலர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள், பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். மாரியம்மனுக்கு, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டிருந்தது. இரவு வரை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று பால்குட விழா, அம்மனுக்கு அபி ?ஷக ஆராதனை நடக்கிறது.
உருளுதண்டம்: சேலம், சாமிநாதபுரத்திலுள்ள, விநாயகர் மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை, கடந்த, 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, சிறுவர், சிறுமியர் உள்பட பலர், கோவிலைச்சுற்றி உருளுதண்டம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, கோவில் எதிரே, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மூலவர் அம்மன், சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மேலும், கோவில் வளாகத்தில், ஐந்து அடி உயரத்தில், தர்பாரில் அமர்ந்திருக்கும் விநாயகர் போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, பக்தர்களை கவர்ந்தது. நாளை இரவு சத்தாபரணம் நடக்கவுள்ளது.