விநாயகர் சிலை தயாரிப்பு: கலெக்டர் அறிவுரை
ADDED :2664 days ago
கிருஷ்ணகிரி: நீர்நிலைகளை பாதிக்காத வகையில், விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும் என்று, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, களிமண்ணால் விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும். சுடப்படாததும், எவ்வித ரசாயனக் கலவையின்றியும் சிலைகளை தயாரிக்க வேண்டும். மேலும், கிழங்கு மாவு, மரவள்ளியில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே சிலைகளை தயாரிக்க வேண்டும். நீரில் கரையும் தன்மையுடைய, தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும். விதிமீறி சிலை தயாரித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.