பத்ரகாளி பீடத்தில் சண்டி ஹோம நிறைவு விழா
பல்லடம்: பல்லடம் அருகே, ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடத்தில், சண்டி ஹோம நிறைவு விழா நடந்தது.பல்லடம் வெங்கிட்டாபுரத்தில், 16 அடி உயரம் கொண்ட, அதர்வண பத்ரகாளி எனப்படும், ஸ்ரீமஹா ப்ரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது.அங்கு, சண்டி ஹோம பெருவிழா, கடந்த, 28ல் துவங்கியது. 15 நாள் நடந்த விழாவில், ஸ்ரீபகமாலினி தேவி, ஸ்ரீநித்ய கல்யாணி தேவி, ஸ்ரீவன்ஹி வாசினி தேவி உட்பட, 15 தேவிகளுக்கு, தினசரி சிறப்பு வேள்வி நடந்தது.செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்க, குடும்ப ஒற்றுமை, பண வரவு, நோயிலிருந்து விடுபட, பயம் நீங்க என பல நன்மைகளுக்காக நடைபெற்ற வேள்விகளில், ஒவ்வொரு நாளும் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.நிறைவு விழாவில், ஸ்ரீமங்கள மஹா சண்டி ஹோமம், ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற்றது.பக்தர்கள் பால் குடம் எடுத்து, அம்மனை வழிபட்டனர். தங்க கவச அலங்காரத்தில், ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்; அன்னதானம் வழங்கப்பட்டது.