தர்மேஸ்வரர் கோவில் ரூ.20 லட்சத்தில் புனரமைப்பு
ADDED :2605 days ago
மணிமங்கலம் : மணிமங்கலம் தர்மேஸ்வரர் கோவில், 20 லட்சம் ரூபாயில் புனரமைப்பு பணி நடக்கிறது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, மணிமங்கலம் கிராமத்தில், 1,000 ஆண்டு பழமை வாய்ந்த, தர்மேஸ்வரர் கோவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலை, தொல்லியல்துறை பராமரிக்கிறது.இந்த கோவிலில் உள்ள சிற்பங்கள், பல இடங்களில் சிதிலமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க, தொல்லியல் துறை, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துஉள்ளது. சில நாட்களுக்கு முன், கோவிலில் புனரமைப்பு பணிகள் துவங்கின. மண்டபம், விமானம் சீரமைப்பு,கோவிலின் உள்ளே நீர் கசியாமல் இருக்க தேவையான பணிகள் நடைபெறுகின்றன. ஆறு மாதங்களில், புனரமைப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். அதன் பின், கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.