உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா

மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா

கீழக்கரை: பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 117ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது. இதற்கான கொடியேற்றம் ஆக.18 மாலை நடந்தது. ஆக.28 மாலை முதல் நள்ளிரவு 10 மணிவரை மவுலீது எனும் புகழ்மாலை ஓதியும், பல்சுவை சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணியளவில் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் சந்தனக்கூடு பல்லக்கு புறப்பட்டது. பெரியபட்டினம் வீதிகளின் வழியாக 9 குதிரைகள் முன்னே செல்ல மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு பல்லக்கு, சந்தனப்பேழை வைக்கப்பட்ட மற்றொரு பல்லக்கும் மகான் செய்யதலி தர்காவை மூன்று முறை வலம் வந்தது.

புனித சந்தனத்தை அடக்கஸ்தலத்தில் பூசி, பச்சை போர்வையின் மல்லிகை சரம் போர்த்தும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4 முதல் இரவு 10 மணிவரை தெம்மாங்கு இசை நிகழ்ச்சி நடந்தது. தர்காவில் இருந்து மீண்டும் பள்ளிவாசலுக்கு சந்தனக்கூடு கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்றனர். செப்., 7 அன்று மாலை கொடியிறக்கம் செய்யப்படும். சந்தனக்கூடு விழா கமிட்டி தலைவர் ஹாஜா நஜ்புதீன், துணைத்தலைவர்கள் சிராஜுதீன், சாகுல்ஹமீது, எம்.களஞ்சியம், கே.சாகுல்ஹமீது, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, முன்னாள் ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கபீர் அம்பலம், ரகீம், தாஹா கான், தொழிலதிபர் சிங்கம் பசீர், இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர். பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !