பழநியில் ‛ரோப்கார் சிறப்பு பூஜையுடன் மீண்டும் இயக்கம்
ADDED :2593 days ago
பழநி, பழநி முருகன்கோயில் ரோப்கார் 48 நாட்களுக்குபின், சிறப்பு பூஜையுடன் நேற்று முதல் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது.பழநி முருகன் கோயிலில் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை.,12ல் நிறுத்தப்பட்டது. புதிய கம்பிவடம், தேய்மானம் அடைந்த உருளை பாகங்கள் மாற்றப்பட்டுள்ளது. சிலநாட்களாக கம்பிவடத்தில் பெட்டிகளை பொருத்தி, குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடந்தது.அதில் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று சிறப்பு பூஜைகள் செய்து ரோப்கார் வழக்கம்போல பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. இதில் இணை ஆணையர் செல்வராஜ், பொறியாளர் நாச்சிமுத்து மற்றும் அலுவலர்கள், ரோப்கார் பணியாளர்கள் பங்கேற்றனர்.