சேலத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் விற்பனைக்கு குவிப்பு
சேலம்: சேலத்தில், விநாயகர் சிலைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. வரும், 13ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. வீடுகள்தோறும், விநாயகர் சிலைகளை வைத்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் மக்கள் அர்ச்சனை செய்வர். மேலும் கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்வர். பிறகு நல்ல நேரம் பார்த்து, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் விட்டு விடுவது வழக்கம். சேலத்தில் சின்னக்கடை வீதி, அஸ்தம்பட்டி, குரங்குச்சாவடி, பொன்னம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதுகுறித்து, ராஜ விநாயகர் கைவினை பொருளகத்தை சேர்ந்த கண்ணன் கூறியதாவது: எங்களிடம், அரை அடி முதல், 12 அடி வரை சிலைகள் உள்ளன. 60 ரூபாயில் ஆரம்பித்து, 13 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் விற்பனைக்கு உள்ளன. இங்கு சிவகுடும்ப விநாயகர், உழவன் விநாயகர், அனுமந்த விநாயகர், கருட விநாயகர், ராஜ விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.