ஆர்.கே.பேட்டையில் அம்மன் திருவிழா அதிகம் ஆடுகளுக்கு கிராக்கி
ஆர்.கே.பேட்டை:ஆவணி மாதம் அம்மன் ஜாத்திரை திருவிழா களை கட்ட துவங்கியுள்ளது. வேண்டுதலை நிறைவேற்ற, ஆடுகளை வாங்க பக்தர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
ஆவணி மாதம், மூன்று மற்றும் நான்காம் வாரங்களில், ஜாத்திரை உற்சவம் கொண்டாடப் படுவது வழக்கம். ஞாயிறு முதல், வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் திருவிழாவில், அசைவ படையல் தாராளமாக இருக்கும்.இதற்காக, வெளி மாநிலங்களில் இருந்து, ஆடுகளை வாங்கி வருவது உண்டு.
பொதட்டூர்பேட்டையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்., 9ல்) ஆராட்டம்மன் உற்சவத்துடன் ஜாத்திரை திருவிழா துவங்குகிறது.
திங்கட்கிழமை (செப்., 10ல்) அதிகாலை, சாற்று நடைபெறும். அன்று துவங்கி, திருவிழா முடியும் வரை, உள்ளூரைச் சேர்ந்தவர்கள் வெளியூரில் இரவு தங்கக்கூடாது என்பது ஐதீகம். செவ்வாய்க்கிழமை இரவு, பொன்னியம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தரு ளுகிறார். மறுநாள் அதிகாலை அம்மன் வீதியுலாவும், காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு கும்பம் படைக்கப்படுகிறது.
இதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து ஊர்வலமாக கும்பம் செலுத்த வருகின்றனர்.வெள்ளிக்கிழமை இரவு அம்மன் வீதியுலாவும், முன்னதாக,
மாலை, 3:30 மணிக்கு, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெரு சார்பாகவும், பக்தர்கள் பல்வேறு வேடம் தரித்து, ரதங்களில் உலா வரும் பாரம்பரிய நிகழ்ச்சி இடம்பெற உள்ளது.
ஜாத்திரையில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, ஆடுகளை பலி கொடுப்பது வழக்கம். இதற்காக, வரும் (செப்.,9ல்) ஞாயிறு முதல், பொதட்டூர்பேட்டையில், சிறப்பு ஆடு சந்தை நடைபெறும்.
இதற்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான ஆடுகளுடன் வியாபாரிகள் வந்துகுவிவர் என,எதிர்பார்க்கப் படுகிறது.