உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீநிவாசபெருமாள் கோவில் மகாகும்பாபிஷேகம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீநிவாசபெருமாள் கோவில் மகாகும்பாபிஷேகம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், மகா கும்பாபிஷேக விழா நேற்று (செப்., 6ல்) நடந்தது. முத்தியால்பேட்டை காந்தி வீதியில் தென்கலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி காலை 7.30 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்ஷபந்தன பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, முதல் காலம், இரண்டாம் கால பூஜைகள் நடந்தது. 5ம் தேதி காலை மூன்றாம் கால பூஜை, விமான கலசங்கள் ஸ்தாபனம் செய்தல், எந்திர பிரதிஷ்டை, நான்காம் கால பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேக விழா நேற்று (செப்.,6ல்) நடந்தது.

இதனையொட்டி, காலை 7.30 மணிக்கு ஐந்தாம் கால பூஜையும், 10.30 மணிக்கு யாத்ரா தானம், கும்பங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, 10.50 மணிக்கு கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமி நாராயணன் வையாபுரி மணிகண்டன், இந்து அறநிலைய துறை செயலர் சுந்தரவடிவேல் உட்பட திரளான பொது மக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !