உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தூர் நாக வாகன விநாயகர் சிலைகளுக்கு வரவேற்பு

ஆத்தூர் நாக வாகன விநாயகர் சிலைகளுக்கு வரவேற்பு

ஆத்தூர்: நாக வாகன விநாயகர் சிலைகளுக்கு, அதிகளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. வரும், 13ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, சேலம் மாவட்டம், ஆத்தூரில், புதுப்பேட்டை, உடையார்பாளையம், விநாயகபுரம், நரசிங்கபுரம், புது உடையம் பட்டி, தம்மம்பட்டி, வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு வித விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக, சிங்கம், மயில், நாகம், அன்னப் பறவை, மான் உள்பட பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பதுபோன்று, சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதில், காளிங்கர் எனும், நாக வாகன விநாயகர் சிலைகளுக்கு, வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்தாண்டில், பாகுபலி, ஜல்லிக்கட்டு விநாயகர் சிலைகளை போன்று, நடப்பாண்டில் மூன்று முகம், பஞ்சமுக விநாயகர் சிலைகளை, புதுவரவாக தயாரித்துள்ளனர். இரண்டு முதல், 10 அடி உயரத்துக்கு மேலுள்ள சிலைகளை, 1,500 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனை செய்கின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு: ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையில் வருவாய், போலீசார், மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், நேற்று (செப்., 6ல்), சிலை தயாரிப்பு கூடங்களில், ஆய்வு செய்தனர். அப்போது, ரசாயனமில்லாத வண்ண பூச்சுகளில், சிலை வடிவமைக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !