உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் வசூலுக்கு டிஜிட்டல்... வசதிகளுக்கு ‘நோ’...

சதுரகிரியில் வசூலுக்கு டிஜிட்டல்... வசதிகளுக்கு ‘நோ’...

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் சேவை வரி வசூல் மட்டும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கொண்டு செல்லும் உணவுப்பொருட்கள், இதர பொருட்களை பயன்படுத்திவிட்டு கழிவுகளை அங்கேயே வீசிவிடுகின்றனர். அவர்களால் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், பாலிதீன் கவர்கள், பாட்டில்களால் மலையின் சுற்றுச்சூழல் பாதிப்பதை தொடர்ந்து  பாதுகாக்கவும்,   பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஆட்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஏற்படும் செலவுகளை பக்தர்களிடமிருந்து சேவை வரி மூலம் வசூலிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர். கடந்த 8  ஆண்டுகளுக்கு முன் இதற்கான வசூல் துவங்கியது. துவக்கத்தில் ஒரு நபருக்கு ரூ.2 வீதம் டிக்கட் வழங்கி வசூலிக்கப்பட்டது. பின்னர் 5 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

கவனிக்க முடியல: வசூல் பல ஆண்டுகளாக நடந்து வந்தபோதும் மலையின் கழிவுகளை அகற்ற ஆட்கள் நியமிக்கப்படவில்லை. பக்தர்களுக்கும் எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. இதற்காக நியமிக்கப்பட்ட ஒன்றிரண்டு மலைவாழ் மக்கள் பக்தர்களிடம் வசூல் செய்வதற்கே ஈடுபடுத்தப் படுகின்றனர். இதனால் மலையின் சுகாதாரப்பணியை அவர்களால் கவனிக்க முடியவில்லை. இது ஒருபுறம் இருக்க பல்வேறு கல்லுாரி, பள்ளி  நாட்டுநலப்பணி திட்டமாணவர்கள்  இங்கு  முகாமிட்டு   பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி செல்கின்றனர். அவர்கள் சேகரிக்கும் கழிவுகளை அடிவாரத்தில் குவித்து வைக்க,  இதை வன ஊழியர்கள் மலையிலிருந்து சேகரித்து வந்ததாக காட்டிக்கொள்கின்றனர்.   வசூல் மட்டுமே இங்கு நடக்கிறதே தவிர சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பணிகள் ஏதும் நடக்கவில்லை.

முகம் சுளிப்பு: இந்நிலையில் இந்த வரிவசூல் கடந்த மாதம் முதல் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக ஊழியர்களுக்கு நவீன டிக்கட் பிரின்டர்  மெஷின்கள் வழங்கப்பட்டுள்ளது.  அதன்மூலம் எத்தனை டிக்கட் விற்பனையாகியுள்ளது, எவ்வளவு தொகை வசூலாகியுள்ளது என்ற விபரங்களை வனத்துறையினர் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் வசூலை மட்டும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

வசூலில் நவீனம்: பக்தர்கள் கூறுகையில், ‘மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. சமீபத்தில் மலைப்பாதையில் பக்தர்கள் தங்குவதற்கு 4 இடங்களில் அறைகள் கட்டப்பட்டன. அதைக்கூட பக்தர்களுக்கு வழங்காமல் வனத்துறையினரே ஆக்கிரமித்துக் கொண்டனர். பாதையில் குடிநீர்  , கழிப்பறை வசதி ஏதும் கிடையாது. அடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக வில்போன் வசதி செய்யப்பட்டது.  அதைக்கூட பராமரிக்காமல் உடைந்து பழுதாகி கிடக்கிறது.  பாதிநாட்களுக்கு மேல் வேலை செய்வதில்லை. கேட்டால் சிக்னல் கிடைக்கவில்லை என்கின்றனர். ஆனால் வசூலை மட்டும் நவீனப்படுத்திக்கொண்டே செல்கின்றனர்,’ என்றனர்.

கூடுதல் செலவு: வனத்துறையினர் கூறுகையில், ‘ மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்கின்றனர். அதன்மூலம் தற்போது வசூலாகும் தொகை இதற்காக நியமிக்கப்பட்ட பணியாளர்களின் சம்பளத்திற்கு கூட போதவில்லை. இந்நிலையில் டிக்கட் பிரின்டர் மெஷின்  வேறு வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது ,’  என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !