செம்பை சங்கீத உற்சவம் கோலாகல துவக்கம்
பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 122வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இரு நாள் சங்கீத உற்சவம், நேற்று கோலாகலமாக துவங்கியது. பாலக்காடு, செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில் நடந்த விழாவை, கேரளா கலாசார துறை அமைச்சர், பாலன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கலா மண்டலம் துணை வேந்தர், நாராயணன் தலைமை வகித்தார். குருவாயூர் தேவஸ்தான தலைவர், மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். வயலின் வித்வான், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகள், டாக்டர், நர்மதா குழுவினரின் வயலின் கச்சேரியும், இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனையும் நடந்தன.இன்று, செம்பை வித்யா பீடத்தின், 33வது ஆண்டு மாநாட்டை, ஆலத்துார், எம்.பி., பிஜூ துவக்கி வைக்கிறார். மிருதங்க வித்வான், குழல்மன்னம் ராமகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். கேரள சங்கீத நாடக அகாடமி செயலர், ராதாகிருஷ்ணன் பேசுகிறார். மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் கச்சேரி நடக்கிறது. விழாவில், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.