சேலத்தில் சுகவனேஸ்வரர் கோவிலில் மாவட்ட நீதிபதி ஆய்வு
சேலம்: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, சேலம், சுகவனேஸ்வரர் கோவி லில், மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், நேற்று (செப்., 11ல்) ஆய்வு நடத்தினார். அப்போது, பக்தர்களிடம் குறைகளை கேட்டார். அப்போது, கோவிலில் இருந்த யானை இறந்துவிட்டதே குறை. வேறு யானைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, அடிப்படை வசதி, கோப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். குருக்கள், பரம்பரையாக பூஜை செய்து வரும் தங்களுக்கு, தொடர்ந்து அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என, நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். மோகன்ராஜ் கூறுகையில், மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், பக்தர்களின் குறைகளை கேட்டு, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பராமரிப்பு, சுகாதார வசதி, குறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடந்தது, என்றார். ஆய்வில், முதன்மை உரிமையியல் நீதிபதி தங்கமணி கணேசன், சார்பு நீதிபதி ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.