திருவள்ளூர் மாவட்டத்தில் 1,000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 1,000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று (செப்.,13ல்), விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகளில், ஒரு அடி வரையிலான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்று சதுர்த்தியை கொண்டாடினர்.
மேலும், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய உட்கோட்டங்களில், இந்து அமைப்பினர்கள், குடியிருப்பு இளைஞர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில், 5 - 10 அடி வரை விநாயகர் சிலை வைத்துள்ளனர். இந்த ஆண்டு, மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூ, பழம், உள்ளிட்ட பூஜை பொருள் விலை பல மடங்கு அதிகரித்தது. இருப்பினும் பொதுமக்கள் வேறு வழியின்றி பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.
திருவள்ளூர் உட்கோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், வரும் 15ம் தேதி, ஆயில் மில் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காக்களூர் ஏரியில் கரைக்கப்பட உள்ளது.
மேலும், அருகில் உள்ள நீர்நிலைகளிலும், சிலைகள் அன்றைய தினம் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட சிலைகள், 16ம் தேதி, பழவேற்காடு மற்றும் சென்னை வங்க கடல் மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் கரைக்கப்பட உள்ளது.
80 சிலை விற்க தடை: திருவள்ளூர், டோல்கேட் அருகில், ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன கலவையில், 80 சிலைகள் தயாரித்திருந்தனர். இதையறிந்த வருவாய் துறையினர் அவற்றை விற்க தடை விதித்தனர்; சிலையை எடுக்க விடாமல் போலீசார் பாதுகாத்தனர்.