மதுரை கூடலழகர் கோயிலில் ரூ.3 கோடியில் பணி
மதுரை:மதுரை கூடலழகர் கோயிலில் மூன்று கோடி ரூபாயில் புனரமைப்பு பணி நடக்க வுள்ளது, என, ஆய்வு நடத்திய மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.கார்த்திகேயனிடம், உதவி கமிஷனர் அனிதா கூறினார்.
உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கூடலழகர் கோயிலை நேற்று (செப்.,21ல்) நீதிபதி கார்த்திகேயன் ஆய்வு செய்தார். சுகாதாரப் பணிகளில் அலட்சியம் கூடாது என அறிவுறுத்தினார். யாகசாலை மண்டபத்தில் யாகம் முடிந்து பல நாட்களான நிலையில் பூஜை பொருட்களை அகற்றாதது குறித்து பட்டர் கண்ணனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிபதியிடம் உதவி கமிஷனர் கூறுகையில், 14 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. கூடுதலாக 16 கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. 75 லட்சம் ரூபாயில் அன்னதானக்கூடம் அமையவுள்ளது. மூன்று கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் துவங்க திட்ட அறிக்கை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் செப்.,15ல் தாக்கல் செய்ய உள்ளோம், என்றார். கண்காணிப் பாளர் சுந்தரேசன், பேஷ்கார் நரசிம்மன்உடனிருந்தனர்.