பொள்ளாச்சி கோவில்களில் நவராத்திரி விழா: அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. விநாயகர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா, 20ம் தேதி வரை நடக்கிறது. தினமும், ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி, தினமும் மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை வாசவி மகாலில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பக்தி இன்னிசை, ஜெயக்குமார் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, நவரச நாட்டியாலயா பரதநாட்டிய நிகழ்ச்சி, 70 கலைஞர்கள் பங்கேற்கும் வீணை கச்சேரி, சொல்லுங்கள், வெல்லுங்கள்; இன்னிசை நிகழ்ச்சி, பிரம்ம குமாரிகள் சொற்பொழிவு, நடனம், பாட்டு, மாறுவேடம், ஓவியப்போட்டிகள் நடக்கின்றன.
கிணத்துக்கடவு: சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம், நவராத்திரியை முன்னிட்டு கொலு பூஜை துவங்கியது.கோவிலின் முன்பகுதியில், அமைக்கப்பட்ட சிறப்பு மாடத்தில், தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். முதல் நாளில் துர்கா பரமேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னபூரணி, ராஜராஜேஸ்வரி, ஆண்டாள், மகாலட்சுமி, சிவபூஜை, மீனாட்சி, சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். நிறைவு நாளில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரங்களில் அம்மன் கொலு வைக்கப்படுகிறது. கொலுவில், அம்மன் அவதாரங்கள், திருமண வைபவம், விவசாயம், விநாயகர் ஞானப்பழம் பெறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இரவு, 7.30 மணிக்கு, கொலு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.