சபரிமலை கோவில் விவகாரம்: மோகனூரில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
மோகனூர்: கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலில், 10 முதல், 50 வயதுக்கு உட்பட்ட அனைத்து தரப்பு பெண்களும் அனுமதிக்கலாம் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது, பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பிரம்மச்சரிய விரதத்தில் அமர்ந்திருக்கும், சபரிமலை சன்னிதானத்துக்கு ஆகம சாஸ்திர விதிமுறைகளை மீறி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என, பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. அதன்படி, மோகனூர் அடுத்த வளையப்பட்டியில், ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய ஐயப்பா அன்னதான சபையின், மாவட்ட பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். மாவட்ட தலைவர் சுப்ரமணி, நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.