உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி அருகே வயலூர் முருகன் 4 கிராம சுவாமிகளுடன் சந்திப்பு

திருச்சி அருகே வயலூர் முருகன் 4 கிராம சுவாமிகளுடன் சந்திப்பு

திருச்சி: திருச்சி வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் முத்துக்குமார சுவாமி புறப்பாடாகி, உய்யக்கொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார். அதன்பின் ஸ்வாமி, அதவத்தூர் ஆற்றங்கரை மண்டபத்துக்குச் சென்றார். அங்கிருந்து இரவு கிளம்பி, வரகாந்திடலை அடைந்து, மண்டகப்படி பெற்று, கீழ வயலூர் தைப்பூச மண்டபத்துக்கு நள்ளிரவு சென்றார். நேற்று அதிகாலை ஒரு மணிக்கு புறப்பட்டு, வடகாபுத்தூர் கிராமத்தை அடைந்தார். அங்கிருந்து, காலை எட்டு மணிக்கு, வடகாபுத்தூரில் இருந்து முத்துக்குமார ஸ்வாமி புறப்பாடானார்.

* ஐந்து சுவாமிகள் சந்திப்பு: இதேபோல, உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர் காசி விஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய கிராம சுவாமிகளும் புறப்பாடாகினர். கிராம சுவாமிகளுக்கு முத்துக்குமார சுவாமி சந்திப்பு கொடுத்தார். அதைத்தொடர்ந்து, சோமரசம்பேட்டை நான்கு வீதிகளில், சுவாமிகள் வலம் வந்து, சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்தை சென்றடைந்தனர். அனைத்து சுவாமிகளும் மண்டபத்தில் தங்கி, இரவு ஏழு மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 7.30 மணியளவில், அனைத்து சுவாமிகளும் தத்தமது கோவில்களுக்கு புறப்பாடாகினர். திருச்சி மற்றும் அதை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஐந்து சுவாமிகளை ஒரே நேரத்தில் தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !