சபரிமலை அனைவருக்கும் பொதுவானது: கேரள ஐகோர்ட் கருத்து
கொச்சி: ‘சபரிமலை அனைவருக்கும் பொதுவானது; இருமுடி கட்டு இல்லாமலும் தரிசனம் செய்யலாம்’ என, கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், உண்மை பக்தர்கள் மட்டுமே தரிசனம் நடத்த அனுமதிக்க கோரி, பா.ஜ., வை சேர்ந்த மோகன்தாஸ் தாக்கல் செய்த மனு மீது, நேற்று விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சபரிமலை அனை வருக்கும் பொதுவானது. 18 படிகளில் ஏறுவதற்கு மட்டுமே இருமுடி கட்டு வேண்டும். இருமுடி இல்லாதவர்கள், எதிர்பக்க வாசல் வழியாக சென்று, தரிசனம் செய்யலாம். இந்த வழக்கம் நீண்ட காலமாக உள்ளது. அனைத்து ஜாதி, மதங்களை சேர்ந்தவர்கள் இங்கு வருகின்றனர். வாவரின் இருதயம் இருக்கும் இடம் சன்னிதானம். இவ்வாறு கூறிய நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக அதிருப்தியும் தெரிவித்தனர். பின், அரசு மற்றும் தேவசம்போர்டு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.