நரகாசுரனும், தீபாவளியும்
கிருஷ்ணருக்கும், பூமாதேவிக்கும் மகனாக பிறந்தவன் தான் நரகாசுரன். அவனுடைய உண்மையான பெயர் பவுமன். இவன் கடும் தவமிருந்து நிறைய வரங்கள் பெற்றவன். தாயைத் தவிர யாராலும் தன்னை கொல்ல முடியாது, என வரம் பெற்றவன். பின்னாளில் அசுர குணங்கள் வாய்க்கப்பெற்று மனிதர்களையும், தேவர்களையும் துன்புறுத்தி அட்டூழியம் செய்ததால் நரகாசுரன் (மனிதனுக்கு எதிராக செயல்படுபவனை நரகர் என்பர்) என அழைக்கப்பட்டான். அவனை அழிக்க கிருஷ்ணர் சென்ற ரதத்தை பூமாதேவியின் சக்தியான சத்தியபாமா ஓட்டி சென்றாள். தாயால் தான் மரணம் ஏற்படும், என நரகாசுரன் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வரவே ரதத்தில் மயங்கி விழுவது போல் நடித்து சத்தியபாமாவை கொண்டு அவனை வதம் செய்தார் கிருஷ்ண பகவான். அரக்கன் நரகாசுரனும், அவன் தாய் பூமாதேவியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவன் இறந்த நாளை புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி சந்தோஷமாகக் கொண்டாடினர். அதுவே தீபாவளி பண்டிகையானது.