அகிலம் போற்றும் தீபாவளி
மராத்தியர் தீபாவளியை தாம்பூலம் போடும் திருவிழா எனவும், ராஜஸ்தான் தீபாவளி ஆண்டு எனவும், சீக்கியர் விடுதலை தினம் எனவும், மகாராஷ்டிராவில் நாட்டிய திருவிழா எனவும், நேபாளத்தில் திகார் என பெயிரிட்டும் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். கைலாயப் பர்வதத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடியதை நினைவில் கொண்டு தீபாவளியன்று இரவு முழுவதும் குஜராத்தி மக்கள் சொக்கட்டான் ஆடுகின்றனர். மலேசியாவில் ஹரி தீபாவளி எனவும், ஒடியாவில் தீபாவளிக்கு முந்தைய நாளே எம தீபாவளி என்றும், பீகாரில் கண்ணன் கோவர்த்தன் மலையைக் குடையாகப் பிடித்த நாளையும், மத்திய பிரதேசத்தில் மகா விஷ்ணு பூமிக்கு வந்த நாளையும் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். சீனா, ஜப்பான், தாய்லாந்து, ஸ்வீடன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகின்றது.
கென்யா நாட்டில் தீபாவளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தீபாவளிக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது. ஆஸ்திரேலியா காலண்டரில் தீபாவளி நாளை குறித்துள்ளது. 1962 ல் வந்த திகம்பரச்சாமியார் என்ற படத்தில் வரும் ஊசிப் பட்டாசே... வேடிக்கையா நீ என்ற பாடல் தான் தீபாவளி பற்றிய முதல் சினிமா பாடலாகும்.
திருச்சி ரங்கநாதர் கோயிலில் தீபாவளியன்று, அவரை ஆஸ்தான மண்டபத்திற்கு கொண்டு வந்து எண்ணெய்க் காப்பிட்டு சந்தனம், மஞ்சனம் நடக்கும். அதன் பிறகு பக்தர்களுக்கு எண்ணெய் மற்றும் சீயக்காய்த் துாளை பிரசாதமாக வழங்குவர். தீபாவளியன்று குபேரன், சிவனை வழிபட்டு பொக்கிஷம் பெற்றதால் பட்சணம் வைத்து குபேர பூஜை செய்கின்றனர். தீபாவளியை கொண்டாடுவோம்; விருந்தோம்பலை விரும்பி ஏற்போம்; ஆதரவற்றோர் இல்லங்கள் சென்று உதவி மகிழ்வோம்.