உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கா ஸ்நானம் ஆச்சா

கங்கா ஸ்நானம் ஆச்சா

பிரம்மாவின் வேதங்களை கவர்ந்த அசுரன் ஹிரண்யாட்சன் பாதாளலோகத்தில் ஒளிந்தான். அதை மீட்க பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அப்போது பூமித்தாயாருடன் ஏற்பட்ட  ஸ்பரிசத்தில் அவளுக்கு பவுமன் என்பவன் பிறந்தான். பூமியின் பிள்ளை என்பது பொருள். பொறுமை மிக்க தாய்க்கு பிறந்த அவன் கெட்ட குணங்கள் மிக்கவனாக இருந்தான். இவன் நரகாசுரன் என  அழைக்கப்பட்டான்.

தேவர்களையும், மக்களையும் கொடுமை செய்தான். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் அவனை யாரும் தட்டிக் கேட்க வில்லை. இருப்பினும் அவனது அட்டூழியம் பொறுக்காமல் பெருமாளிடம்  புகார் செய்தார் பிரம்மா. ஆனால் தன் தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றிருந்தான் நரகாசுரன். அப்போது சத்தியபாமாவாகப் பூமியில் வாழ்ந்தாள் பூமாதேவி.  அவள் பகவான் கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்தாள். கிருஷ்ணர் அவளை அழைத்துக் கொண்டு நரகாசுரனுடன் போருக்குச் சென்றார். ஒரு கட்டத்தில் நரகாசுரனால் தாக்கப்பட்டு  மூர்ச்சையடைபவர் போல நடித்தார்.

பதறிப்போன பாமா தன் கணவரைக் காப்பாற்ற மகனான நரகாசுரன் மீது அம்பு தொடுக்கவே, அவன் இறந்தான். இறந்தவன் அசுரன் என்றாலும் மகன் என்பதால் பெற்ற வயிறு பதறியது. அதே நேரம்  அவனது இறப்பை முன்னிட்டு மக்கள் எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை உடுத்தி கொண்டாட வேண்டும் என கிருஷ்ணரிடம் வரம் கேட்டாள். அந்நாளையே தீபாவளி நன்னாளாக  கொண்டாடுகிறோம். இந்நாளில் எண்ணெய்யில் மகாலட்சுமியும், நீரில் கங்கையும் வாசம் செய்வதால் தீபாவளி குளியலை ஒருவருக்கொருவர் கங்கா ஸ்நானம் ஆச்சா எனக் கேட்பது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !