உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருணை மனம் வேண்டும்

கருணை மனம் வேண்டும்

அப்துல்லாவுக்கு இறைவன் மீது அபார பக்தி. மனைவியை இழந்த அவர், இறைவனைப் பழித்துப் பேசினால் கோபப்படுவார்.  ஒருநாள் மழை பெய்தது. பிச்சைக்காரர் ஒருவர் நனைந்தபடியே அப்துல்லாவின் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டார். “ஐயா! நனையாதீர்கள்; உள்ளே வாருங்கள், உணவளிக்கிறேன்” என்றார். தயங்கிய பிச்சைக்காரரின்  கையை பிடித்து அழைத்து வந்து உணவு பரிமாறினார் அப்துல்லா. பசியில் இருந்த அவர் வேகமாக சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரைத் தடுத்ததோடு, “பசியில் தவித்த உங்களுக்கு உணவளித்த இறைவனுக்கு நன்றி சொல்லாமல் சாப்பிடுவது தவறல்லவா..”  என்றார்.

“எனக்கு உணவளித்தது நீங்கள் தான். இறைவன் அல்ல! வேண்டுமானால் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார் பிச்சைக்காரர். அப்துல்லாவுக்கு கோபம் எழுந்தது. இறைவனுக்கு நன்றி சொன்ன பிறகே சாப்பிட வேண்டும் என மீண்டும் வற்புறுத்தியும் கூட அவர் ஏற்கவில்லை.  “அப்படியானால்... என் வீட்டில் சாப்பிட அனுமதியில்லை” என சப்தமிட பிச்சைக்காரர் புறப்பட்டார். வருத்தமுடன் அன்றிரவு தூங்கினார் அப்துல்லா. அவரின் கனவில் “பசியோடு வந்தவரை சாப்பிட விடாமல் விரட்டினாயே... அது சரியா” எனக் கேட்டார் இறைவன்.  “அவர் உங்களை நம்ப மறுத்தார். நன்றியும் சொல்லவில்லை. அதனால் விரட்டினேன்” என்றார். “இன்று நேற்றல்ல... 70 ஆண்டுகளாக அவர் என்னை மறுத்தே வருகிறார். ஆனாலும் நான் பொறுமையுடன் உணவளித்து வருகிறேன்.  ஒரே இரவில் கோபப்பட்டு நீ துரத்தி விட்டாயே” என்றார். கனவு கலைந்த அப்துல்லா விழித்தார். அளவற்ற கருணை கொண்ட கடவுள் போல நாமும் இனி எல்லா உயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும் என முடிவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !