கந்தசஷ்டி விழாவுக்காக மலையேறிய கஸ்துாரி
ADDED :2626 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் நடைபெறும் ஒரே ஒரு திருவிழா கந்தசஷ்டி மட்டுமே. இவ்விழா நேற்று காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நவ.,14ல் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது. ஆண்டு முழுவதும் பெரியநாயகியம்மன் கோயிலில் தங்கியுள்ள கஸ்துாரி யானை, கந்தசஷ்டி விழாவுக்காக மட்டுமே மலைக்கோயிலுக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம். இதையடுத்து நேற்று கந்தசஷ்டி விழா துவங்கியதால், காலையில் கஸ்துாரி மலைஅடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, யானைப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றது. அங்கு கந்தசஷ்டி விழா முடியும் வரை தெற்கு வெளிப்பிரகார மண்டபத்தில் தங்கும். பக்தர்கள் யானையை வணங்கிச் செல்கின்றனர்.