உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரை கடற்கரையில் குவியும் துணிகள்: பக்தர்கள் வேதனை

சேதுக்கரை கடற்கரையில் குவியும் துணிகள்: பக்தர்கள் வேதனை

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் சேதுபந்தன ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடற்கரையில் பக்தர்களின் பழைய துணிகள் அகற்றப்படாததால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள்  சேதுபந்தன ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இங்குள்ள கடற்கரையில் புனித நீராடி, தங்களது பழைய உடைகளில் கடலில் கழற்றி விடுகின்றனர்.

குவியும் துணிகள்: இங்கு பக்தர்களால் கடலில் விடப்படும் துணிகளில், பயன்படுத்தும் நிலையில் இருப்பதை பணியாளர்கள் உடனுக்குடன் எடுத்து செல்கின்றனர். பயன்படுத்த முடியாத துணிகளை கடற்கரைப்பகுதியில் விட்டு விடுகின்றனர்.பழைய துணிகள் கரைப்பகுதியில் குவிந்து கிடக்கிறது.

சுகாதாரக்கேடு: பழைய துணிகள் மட்டும் அல்லாமல், கடலில் போடப்படும், பூக்கள், பிளாஸ்டிக் காகிதங்களால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. சுகாதார பணியாளர்கள் அவ்வப்போது உள்ள குப்பைகளை அகற்றாமல் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக பக்தர்களுக்கு நோய் பரவும் நிலை ஏற்படுகிறது.

பயன்படாத ஓய்வறை : கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இது அனைத்து நேரங்களிலும் பூட்டியே கிடக்கிறது. பக்தர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. மழை, வெயில் நேரங்களில் ஒதுங்க இடமின்றி பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பக்தர்கள் வேதனை: சேது கடற்கரைக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள சுகாதாரக்கேடுகளை பார்த்து மனம் வேதனையடைகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேது கடற்கரையை சுகாதாரமான இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் பயன்படுத்த ஓய்வறையை திறந்து வைக்க முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !