சபரிமலை செல்ல இளம்பெண்களுக்கு காரைக்குடி குருசாமி செல்வராஜ் கருத்து
காரைக்குடி, ஒரு போதும் இளம் பெண்களுக்கு இருமுடி கட்டி பாவத்தை சம்பாதிக்க மாட் டோம், என காரைக்குடி குருசாமி எம்.செல்வராஜ் தெரிவித்தார்.காரைக்குடி பருப்பூரணி யில் 18 படி கொண்ட ஐயப்பன் கோயிலை நிர்வகித்து, ஐயப்பா சேவா சங்கம் மூலம் இருமுடி கட்டி வரும் அவர் கூறியதாவது:18 வயது முதல் 46 ஆண்டுகளாக சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்று வருகிறேன்.
20 முதல் 25 வயது வரை நான் உட்பட ஏழு பேர் காரைக் குடியிலிருந்து நடந்து 15 நாள் பயணமாக சபரிமலை சென்றுள்ளோம். பருப்பூரணி ஐயப்பன் கோயிலில் ஆண்டுக்கு 500 பேர் வரை இருமுடி கட்டி வருகிறேன். 1977-களில் இருமுடியை ஐயப்பனுக்கும், பின்முடியை சாப்பாட்டுக்கும் கட்டி கொள்வோம். பின் முடியில் சத்துமாவு இருக்கும்.வழியில்லாத இடங் களில் வழி ஏற்படுத்தி செல்வோம். பெருவழிப்பாதை இரண்டு நாள் பயணம் இன்ப மயமானது. ஐயப்பனை தவிர வேறு எந்த எண்ணமும் இருக்காது. காலை 4:30 மணிக்கு எழுந்து நடக்க ஆரம்பித்து விடுவோம்.10 வயது பெண்ணை குழந்தையாகவும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை தாயாகவும் பாவிக்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இளம்பெண்களை சபரி மலை செல்ல அனுமதித்தால், கட்டுப்பாடுகள் காணாமல் போய்விடும். ஆண்கள், பெண்கள் ஒன்றாக செல்லும்போது கவனம் சிதறும். ஒரு போதும் இளம்பெண்களுக்கு இருமுடி கட்டி பாவத்தை சம்பாதிக்க மாட்டோம்.ஐயப்பன் பிரமச்சாரியாக படைக்கப்பட்டு, யோக நிலையில் இருப்பவர்.
விரத காலங்களில் தூய்மையாக இருந்து கட்டுப்பாடுடன் வாழ்கின்றனர். குடும்பத்தினர் சாமி கள் விரதம் விட்ட பிறகே உணவருந்துகின்றனர். இளம்பெண்களை அனுமதிக்கும்போது விரதத்துக்காக காத்திருக்க மாட்டார்கள். பாத பூஜை காணாமல் போய்விடும். முன்பு ஊருக்கு 150 சாமிகள் இருந்தனர். தற்போது தெருவுக்கு 100 பேர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்வோர் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர், என்றார்.
இருமுடி கட்டி சபரிமலை செல்ல குருசாமி செல்வராஜின் அலைபேசி 99432 81053 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.