எதுவந்தாலும் ஏற்றுக்கொண்டால் துணிவே துணையாய் மாறும்!
எல்லா பொருள்களிலும் கடவுள் இருக்கிறார். எனவே மனிதனை மட்டுமின்றி விலங்குகளையும் பறவைகளையும்கூட இறைவனாகவே நினைத்துப்பார். எல்லா தீமைகளையும் எதிர்த்து போராடு; அன்பாக நடந்துகொள்; மற்றவர்களுக்கு உதவி செய்; ஏழைகளுக்கு தொண்டு செய்; கைம்மாறு கருதாமல் எல்லாவற்றையும் மக்களுக்கு கொடு. நீ செய்யும் செயலுக்குரிய பலனை மட்டும் கருத்தில் கொள்ளாதே. அந்த செயலை செய்யும் முறையிலும் கவனத்தை செலுத்து. குறிக்கோளில் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும் பாதையிலும் செலுத்த வேண்டும். என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று நீ நினைத்தால் அனைத்தையும் செய்து முடிப்பாய். ஏனெனில் உனக்குள் எல்லையற்ற சக்தி இருக்கிறது. மனதில் களங்கம் இல்லாதவர்கள் கடவுளை தரிசிக்க வானத்திற்கோ சொர்க்கத்திற்கோ போக வேண்டாம். அவர்களால் இந்தப் பிறவியிலேயே, இந்த பூலோகத்திலேயே கடவுளை காணமுடியும். வலிமைதான் வாழ்வு. பயமே மரணம். உன் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை இதுதான். ஏழைகளுக்கு உதவி செய். சண்டைபோடாதே. குடும்பத்தையும் தேசத்தையும் ஒற்றுமையாக வைத்திருக்க முயற்சி செய். எந்தப் பொருளையும் ஆக்கு. அழிக்கும் முயற்சி வேண்டவே வேண்டாம். ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொள்ளாதீர். தெருவில் குப்பை கூட்டுகிறவன் கூட, அரியணையில் அமர்ந்து ஆட்சி புரியும் மன்னரைப் போன்ற பெருமையும் சிறப்பும் உடையவனே. சமரசமும் சாந்தமுமே உன்னை நல்வாழ்வு வாழ வைக்கும். நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்க வேண்டும் என்று நினைக்காதே. தீமை நடந்தாலும் முழு மனதுடன் ஏற்றுக்கொள். ஏனெனில் தீமையிலிருந்துதான் மனிதன் பெரும் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். இன்பத்தைவிட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. காலையில் எழுந்ததும், இறைவா! நான் பலன் கருதாமலும் சுயநலம் இல்லாமலும் உன்மீது பக்தி கொண்டிருக்க எனக்கு அருள்செய், என்று பிரார்த்தனை செய். முதலில் உன்னைச் சரிப்படுத்துங்கள். அதன்பிறகு உலகத்தை சரிப்படுத்தும் தகுதியை அடைவாய். மரணத்துக்கு அப்பாலும் உன்னைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் சுடுகாட்டிலேயே எரிந்துபோகும். உலகம் உன்னை கேலி செய்வது பற்றி பொருட்படுத்தாதே. உனது கடமைகளை செய்துகொண்டே போ. அளவற்ற தன்னம்பிக்கையுடன் இரு. இதன்மூலமே, நீ வெற்றியை எட்ட முடியும். -கர்ஜிக்கிறார் விவேகானந்தர்