திருக்கார்த்திகை விரதம்
கார்த்திகை மாத திருக்கார்த்திகை விரதம் சிவபெருமானுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விரதமிருப்போர் கார்த்திகை மாதம், பரணி நட்சத்திர நாளில் இந்த விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்று பகலில் உணவு உண்டு. இரவில் உணவு உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று முழுதும் விரதமிருந்து, துதிகள், நாமாவளிகள், பாராயணம் என்று இறைசிந்தனையுடன் இருந்து பகலில் உணவு, உறக்கம் தவிர்த்து, மாலையில் நீராடி சிவன் கோயில் முருகன் கோயில் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். பின்னர் இல்லம் வந்து விளக்கேற்றி வழிபட்டு, பிரசாதங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மறுநாள் ரோகிணி அன்றும் விரதமிருந்து, பகல் உணவு உண்டு. பகல் உறக்கம் தவிர்த்து, கந்தசஷ்டி, கந்தபுராணம் போன்றவைகளைக் கூறி மாலையில் கோயில் சென்று தீபமேற்றி வழிபட்டு, பின் வீடு வந்து வழிபட்டு, இரவு உணவைத் தவிர்த்து, பால், பழம் அருந்தி இறைசிந்தனையுடன் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த விரதத்தை கார்த்திகை மாதம் பரணி, கார்த்திகை, ரோகிணி என்று 3 நாட்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். பின்னர் வரும் மாதங்களிலும் கார்த்திகை நட்சத்திரத்தன்று மட்டும் விரதம் இருந்து முருகனை வழிபடலாம். வழக்கமான விரதங்கள் போன்றே இதனைக் கடைப்பிடிக்கலாம். கார்த்திகை விரதத்தின் மகிமையை சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளினார். இவ்விரதம் இருப்போர் குமரக்கடவுள் அருளையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாகப் பெறுவர். அதன் பலனாக நிறைவான அறிவு, செல்வம், ஆயுள், ஆரோக்கியம் என அனைத்தும் வந்தடையும்!