திருவண்ணாமலை தீப திருவிழாவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2626 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், மஹா தேரோட்டம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், ஏழாம் நாளில் மஹா தேரோட்டம் நடந்தது. பஞ்ச மூர்த்திகள் தனித்தனி தேரில் அலங்கரிக்கப்பட்டு, மாட வீதியில் உலா வந்தனர். இதையடுத்து, 63 அடி உயர மஹா தேரில் உண்ணா முலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சுவாமியை வண்ண மலர்களால் அலங்கரித்து, மதியம், 2:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு, வீதி உலா துவங்கியது. இதில் ஆண்கள் இடது பக்கமும், பெண்கள் வலது பக்கமும், இரும்பு சங்கிலி வடத்தை பிடித்து, தேரை இழுத்துச் சென்றனர். அப்போது, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர்.