மலை மீதேற பக்தர்களுக்கு தடை : திருவண்ணாமலை வனத்துறை அறிவிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. கிரிவல மலையின் மொத்த பரப்பில், 699.3 ஹெக்டேர் வனத்துறை
பராமரிப்பிலும், 234 ஹெக்டேர் வருவாய்த்துறை பராமரிப்பிலும் உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து, மலைக்கு செல்லும் அனைத்து வழிப்பாதை களிலும் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மலை மீது, மஹா தீபத்தன்று, 2,500 பேர் மட்டும் மலை மீதேற அனுமதிக் கப்பட்டனர். வரும் டிச., 3 வரை, மலை மீது மஹா தீபம் எரியும். இதைக்காண, மலை ஏறி வரும் பக்தர்கள், மரங்களுக்கு தீ வைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதைத்தடுக்க, மலை மீது ஏற, வனத்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் கூறியதாவது: தீபத்திருவிழா முடிந்த நிலையில், மலைமீது செல்ல, இனி அனுமதியில்லை. மீறினால், வனத்துறை சட்டத்தின் கீழ், அபராதம் மற்றும் வழக்குதொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே, அனுமதியின்றி மலைக்கு, வெளிநாட்டினரை அழைத்து சென்ற சுற்றுலா வழி காட்டிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. எனவே, மலையேறுவதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.