காலபைரவர் ஜெயந்தி: தட்சணகாசி கோவிலில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி: காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த, பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு, பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு காப்பு கட்டுதல், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தியுடன் கொடிறேற்றம் நடந்தது. இன்று(நவ.,30) காலை, 5:00 மணிக்கு விஷ்பரூப தரிசனம், கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், யாகதச ருத்ர ஹோமம், கோ பூஜை, அஷ்வ பூஜை, 64 வகையான அபிஷேகம் ஆகியவற்றை, 18 குருக்கள் கொண்டு, ஒரு லட்சத்து எட்டு அர்ச்சனை செய்து, பைரவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, ராஜஅலங்காரம் செய்யப்பட்டது.
* கிருஷ்ணகிரி அடுத்த, கல்லுகுறிக்கி பெரிய ஏரி மேற்குகோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், பைரவர் ஜெயந்தி மற்றும் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ பூஜை, பைரவர் ஹோமம் நடந்தது. 10:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மேல் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், காலபைரவர் மற்றும் திரிபுர பைரவி அம்மையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவிலை சுற்றி தேரில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.