உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநந்திக்கரையில் பரிகார பூஜை வரும் 19ல் திருவிழா கொடியேற்றம்

திருநந்திக்கரையில் பரிகார பூஜை வரும் 19ல் திருவிழா கொடியேற்றம்

திற்பரப்பு : திருநத்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் நடந்து வரும் பரிகார பூஜை இன்று(17ம் தேதி) நிறைவடைகிறது. வரும் 19ம் தேதி சிவராத்திரி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பழமைவாய்ந்த திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களில் நான்காவது கோயிலாகும். இக்கோயிலில் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமலும், பூஜைகள் நேர்த்தியாக செய்யாததாலும் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் முன்னோடியாக ஏழு நாட்கள் நடந்து வந்த பரிகார பூஜைகளும், ஹோமங்களும் இன்று(17ம் தேதி) நிறைவடைகிறது. கோயில் தந்திரி சங்கரநாராயணரு தலைமையில் புரோகிதர்கள் பூஜைகள் நடத்தினர். இன்று காலை மகாகணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சமர்ப்பணம், சாயூஜ்ய பூஜை நடக்கிறது. தொடர்ந்து 25 கலசாபிஷேகத்துடன் உச்சபூஜை, மங்களாரதி தக்ஷணை கொடுக்கப்படுகிறது. வரும் 19ம் தேதி இவ்வருட சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது. மாலை 6ல் இருந்து 7.30க்கு இடைப்பட்ட சுபமுகூர்த்தத்தில் கொடியேற்றப்படுகிறது. பன்னிரு சிவாலயங்களில் சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர விழா நடக்கும் ஒரே கோயில் இதுவேயாகும். விழா நாட்களில் புராண பாராயணம், நவகாபிஷேகம், சமய சொற்பொழிவு, அன்னதானம், ஸ்ரீபூதபலி எழுந்தருளல், பஜனை, கலைநிகழ்ச்சி நடக்கிறது. எட்டாம் நாளான 26ம் தேதி மாலை 1008 திருவிளக்கு பூஜை, ஒன்பதாம் நாள் திருமணநிதி உதவி வழங்கல், சிறப்பு பூஜைகள், பத்தாம் நாள் காலை சுவாமி யானை மீது ஊர் பவனி, இரவு தாலப்பொலி, சுவாமி ஆறாட்டு, தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !