ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம்
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் துவங்கியது. உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 2ம் நாள் உற்சவமான நேற்று உற்சவமூர்த்தி யக்ஞவராகன் சிறப்பு அலங்காரத்தில் உள்பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 18ம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.
சேத்தியாத்தோப்பு: வீரமுடையாநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கான ஒவ்வொரு ஆண்டும் உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று பகல் பத்து 2ம் நாள் விஷேச பூஜையை முன்னிட்டு மூலவர் வீரசக்தி ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் ஆன சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடமாலை சாற்றி மகா தீபாராதனை நடந்தது.