உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாரில் தங்க ரிஷப வாகனம் வெள்ளோட்டம்!

திருநள்ளாரில் தங்க ரிஷப வாகனம் வெள்ளோட்டம்!

காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் 65 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட தங்க ரிஷப வாகனம் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் அருள் பாலித்து வருகிறார்.கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடத்தப்படும். இந்நிகழ்ச்சிக்காக கடந்த 2010ம் ஆண்டு தங்க ரிஷப வாகனம் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி, தங்க ரிஷப வாகனம் செய்ய பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் துவங்கின. காணிக்கை மூலம் கிடைத்த 65 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி, 75 கிலோ வெண்கலத்தால் தங்க ரிஷப வாகனம் தயார் செய்யும் பணி நடந்தது. 10 அடி உயரம், ஐந்தடி அகலத்தில் வெள்ளி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளோட்டம்: நேற்று காலை, 9.30 மணிக்கு கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், தங்க ரிஷப வாகனம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், ரிஷபத்திற்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து, மகா தீபாராதனை செய்யப்பட்டு நேற்று மாலை வெள்ளோட்டம் விடப்பட்டது. நிகழ்ச்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் கலந்து கொண்டு பக்திப் பாடல்கள் பாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !