பக்தர்கள் நலன்வேண்டி பழநியில் சிறப்பு யாகபூஜை
பழநி: பழநி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நலன்கருதி மலைக்கோயில் மற்றும் உப கோயில்களில் சிறப்பு பூஜைகள் ஒருவாரம் நடைபெறுகிறது. பழநி முருகன் கோயிலில் தைப்பூசவிழா வரும் ஜன.,15ல் துவங்கி 24 வரை நடக்கிறது. இவ்விழாவிற்காக மார்கழியில் மாலை அணிந்த முருக பக்தர்கள் விரதம் இருந்து, பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். பொங்கல் பண்டிகை, தைப்பூசவிழா நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறுபாதயாத்திரையாக வரும் பக்தர்களின் நலன்வேண்டி பழநி மலைக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு யாகபூஜைகள் நடக்கிறது. நேற்று மலைக்கோயிலில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் அமிர்தலிங்ககுருக்கள், செல்வசுப்ரமணியம் குழுவினர் மூலம் யாகபூஜை, கணபதிஹோமத்துடன் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. இன்று அடிவாரம் வீரதுர்க்கையம்மன், கிரிவீதி அழகுநாச்சியம்மன்கோயில், மகிஷாசூரமர்த்தினி, பாதவிநாயகர்கோயில் உள்ளிட்ட கோயிலில் ஜன.,4 வரை அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.