ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்: காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம்
காஞ்சிப்பெரியவரை மகாசுவாமிகள் என்றும் பரமாச்சாரியார் என்றும் ஜகத்குரு என்றும் என அனைவரும் கொண்டாடினர். ஜகத்குரு என்றால் இந்த ஜகத்திற்கு நான் குரு என்பதல்ல பொருள்; இந்த ஜகமே எனக்கு குரு என்பதாக பொருள் கொள்கிறேன். நான் வாழும் இந்த உலகம் எத்தனையோ விஷயங்களை எனக்கு போதிக்கிறது என அடக்கத்துடன் தெரிவித்தவர் மகாசுவாமிகள். 1894 வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் சுப்பிரமணிய சாஸ்திரிகள், மகாலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர், 13 வயதில் துறவியானார். அதன் பின் 87 ஆண்டுகள் துறவியாக வாழ்ந்தார்.
தெரியாத விஷயமே இல்லை என பிரமிக்கும் அளவுக்கு ஏராளமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார். பெரும் பரதக் கலைஞர்கள் நாட்டியத்தில் வரும் கரணங்கள் தொடர்பாக அவரிடம் விளக்கம் பெற்றதுண்டு. எந்தெந்தக் கோயில் சிற்பங்களில் எந்தெந்த அபூர்வக் கரணங்கள் சிலை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன என விளக்கி, அங்கு சென்று அவற்றைப் பார்த்துக் கற்குமாறு நெறிப்படுத்தினார். சிற்பக்கலைஞர்களிடம் கைதேர்ந்த ஸ்தபதி போல அவர் உரையாடியதுண்டு.
இசைக் கலைஞர்கள் வந்தால் அவர்களைப் பாடச் சொல்லி, அவர்கள் பாடும் பாட்டின் ராக நுணுக்கங்களை விவாதிப்பார். இவ்வளவு சங்கீத ஞானம் இவருக்கு எப்படி வாய்த்தது என பாடகர்கள் வியப்பார்கள். இசையரசி எனப் போற்றப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி மகாசுவாமிகளின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் ஐக்கிய நாடுகள் சபையில் பாடச் சென்ற போது சுவாமிகளிடம் ஆசி பெற வந்தார். அங்கு பாடுவதற்காக மைத்ரீம் பஜதாம் என்ற ஸ்லோகத்தை எழுதி தந்தார் சுவாமிகள். அதன் மையக் கருத்து உலகில் யுத்தம் வேண்டாம், நாடுகள் எல்லாம் நேசமாக இருந்து எங்கும் அமைதி தழைக்கட்டும் என்பது தான்.
விஞ்ஞானத்திலும் சுவாமிகளுக்கு ஆர்வம் இருந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் அவரிடம் ஆசி பெற வந்ததுண்டு. அவர்களிடம் கேள்வி கேட்டு விண்வெளி ஆய்வு தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்வார். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் அவரின் இலக்கிய அறிவு மட்டுமல்ல, இலக்கண அறிவும் கூட வியக்க வைப்பதாகும். அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியைத் தம் வறுமை தீர்வதன் பொருட்டுப் பாராயணம் செய்யலாமா என தமிழறிஞர் ஒருவர் கேட்ட போது, பாராயணம் செய்யலாம் எனச் சொன்ன சுவாமிகள், அதற்கான அகச்சான்று இருக்கிறது என விளக்கினார். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பதில் வருவாய் என்ற சொல் வருகிறது. அதை வா என்னும் பொருளில் மட்டுமல்லாமல் வருவாய் அருள்வாய், அதாவது செல்வம் தருவாய் என்பதாக பொருள் கொள்ளலாம் என விளக்கியது கேட்டு வியந்தார் தமிழறிஞர்.
மந்திரங்களின் மகிமை குறித்து நிறையப் பேசியிருக்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் செல்வம், ஆரோக்கியத்தை தரும் என்றும், காயத்ரி மந்திரம் இம்மை, மறுமை நலன்களைத் தரும் என்றும் சொல்லி பக்தர்கள் ஜபிக்க ஊக்குவித்தார். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றின் மகத்துவம் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறார். பணத்தை ஒரு பொருட்டாக அவர் மதித்ததில்லை. நாடி வரும் செல்வந்தர்கள் பெரும் தொகையை சமர்ப்பித்தால் அப்படியே ஒதுக்கி விட்டுச் சிரிப்பார். யாராவது ஏழைகள் தமது பெண் திருமணத்திற்குப் பணமில்லை எனக் கண்ணீர் வடித்தால் அப்பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறி விடுவார். இப்படி தேவையானவர்களுக்கு அவர் வழங்கிய சந்தர்ப்பம் ஏராளம். ஏழை, பணக்காரர் என சுவாமிகள் யாரையும் பேதம் பாராட்டியதில்லை. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்த்தார் அவரைப் பொறுத்தவரை அனைவரும் கடவுளின் குழந்தைகள். அந்த சமநோக்கு காரணமாக மக்கள் அவரை ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரமாக, நடமாடும் தெய்வமாக போற்றப்பட்டார். வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் கடவுளின் குணம் அல்லவா?
-– திருப்பூர் கிருஷ்ணன் –