தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதிகளை மேம்படுத்த அறிவுரை
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் கலெக்டர் பேசியதாவது: பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக திண்டுக்கல் - பழநி வரையிலான நடைபாதையில் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். பேவர் பிளாக் சாலைகள் முடியும் இடத்தில் மணல் மூடைகள், ஒளிரும் பட்டைகளை கொண்ட தடுப்பு ஏற்படுத்தவேண்டும். போலீசார் இரவில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு கையில் கட்டி கொள்ள ஒளிரும் பட்டைகள், குச்சிகளை தேவையான அளவு கொடுக்க வேண்டும். ரோட்டோரங்களில் டியூப் லைட்டுகள் கட்டப்பட்டு வருகிறது.
சுகாதாரமான முறையில் உணவு நியாயமான விலையில் உணவு வழங்குவது தொடர்பாக ரோட்டோர கடைகளை உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டும். விலைபட்டியல் வைக்காத உணவகங்களுக்கு பழநி நகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழநியில் பக்தர்கள்
வசதிக்காக கூடுதலாக பொது கழிப்பறை, குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ.வேலு, எஸ்.பி.,சக்திவேல், பழநி சார் ஆட்சியர் அருண்ராஜ், பழநி மலைக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் பங்கேற்றனர்.