மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனுார் : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், கொட்டும் பனியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம, தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு, 11:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், சிவ வாத்தியங்கள், மேளதாளம் முழங்க, ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார்.அங்கு விசேஷ தீபாராதனையுடன் ஊஞ்சல் தாலாட்டு துவங்கியது. கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இரவு, 12:30 மணிக்கு, மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. கடும் பனியிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்றனர். ஊஞ்சல் உற்சவத்தின் போது ஊஞ்சல் மண்டத்திற்கு மொபைல் போன் எடுத்து வருவோர், கீழே உள்ள பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதையடுத்து, நேற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு மொபைல் போன் கொண்டு செல்ல, இந்து சமய அறநிலையத் துறையினரும், போலீசாரும் தடை விதித்தனர். இதனால் ஊஞ்சல் மண்டபத்தில் ஓரளவு நெரிசல் குறைந்தது.