கீழடி அருகே பழங்கால சுவர் கண்டுபிடிப்பு
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே லாடனேந்தலில் ரயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பழங்கால சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. லாடனேந்தலில் மதுரை- ராமேஸ்வரம் ரயில் பாதை குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. கடந்த மாதம் இப்பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொல்லியல் ஆய்வுக் குழுவினர், அப்பொருட்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.தற்போது பழங்கால கட்டட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சுவர்களில் உள்ள செங்கல் நீள்வாக்கிலும், உயரம் குறைந்தும் காணப்படுகிறது. சுவர் அருகே மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகளும் இருந்தன. தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை.கீழடியை தொடர்ந்து லாடனேந்தல், கீழடி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொள்வதுடன், சுரங்க பாதை பணியின் போது கிடைத்து வரும் பொருட்களை பாதுகாக்க வேண்டும்.