புல்மேடு பாதையில் காட்டு யானைகள் : பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
கூடலூர்: சபரிமலைக்கு செல்லும் புல்மேடு பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்புடன் செல்ல கேரள வனத்துறையினர் அறிவுறுத்தி
உள்ளனர்.தமிழகப்பகுதியில் இருந்து குமுளி வழியாக சபரிமலைக்கு செல்ல எரிமேலி, பம்பை வழியாக ஒரு பாதையும், வண்டிப்பெரியாரில் இருந்து வல்லக்கடவு, சத்திரம், புல்மேடு வழியாக மற்றொரு பாதையும் உள்ளது.
குமுளியில் இருந்து எரிமேலி, பம்பை வழியாக 150 கி.மீ., தூரம் சுற்றிச்செல்ல வேண்டும். அதேவேளையில் குமுளியில் இருந்து வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சத்திரம் வழியாக 27 கி.மீ., வாகனத்தில் புல்மேடு சென்று அங்கிருந்து 7 கி.மீ., வனப்பகுதிக்குள் நடந்து சென்றால் சபரிமலையை அடைந்து விடலாம்.
இதனால் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பக்தர்கள் ஏராள மானோர் புல்மேடு பாதையை பயன்படுத்துகின்றனர். ஜன. 14ல் மகரஜோதியை புல்மேட்டில்
இருந்து நன்றாக பார்க்கலாம்.
யானைகள் கூட்டம்: கடந்த சில நாட்களாக சபரிமலை வனப்பாதையில் யானைகள் முகாமிட்டுள்ளன. எனவே காலை 7:00 மணியில் இருந்து மாலை 3:00 மணி வரை மட்டுமே
இப்பாதையை பயன்படுத்த வேண்டும், புல்மேட்டில் இருந்து சன்னிதானம் உரல்குழி தீர்த்தம் வரை பக்தர்கள் கூட்டமாக நடந்து செல்ல வேண்டும், என கேரள வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.