உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருளை வாரி வழங்கும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்

அருளை வாரி வழங்கும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்

கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கொண்டத்துகாளியம்மன், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி கொண்டிருக்கிறார். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூரில் புகழ்பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோவில் எப்போது அமைக்கப்பட்டது என்ற சான்று எதுவும் கிடையாது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சரித்திர புகழ் பெற்ற கோவிலாக இருக்க வேண்டும்.கொண்டத்து காளியம்மன் கோவில் வளாகம், நீண்ட சதுர வடிவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால், நான்கு திசையிலும் உயர்ந்த மதில்கள் சூழ்ந்துள்ளன. இதன் மையப்பகுதியில் கற்கோவில் மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தின் உட்பகுதியில், வழுவழுப்பான கருங்கற்களாலான அழகிய கர்ப்ப கிரகத்தில், அம்மை அருள்வடிவாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி கொண்டிருக்கிறார்.

வடக்கு வாயிலின் முன்பு, தடப்பள்ளி வாய்க்கால் அமைந்து வளம் பெருக்குகிறது. மேற்கே கல்யாண விநாயகர் எழுந்தருளி கன்னியருக்கும், காளையருக்கும் திருமணம் கைக்கூட அருள்பாலிக்கிறார். மேற்கு வாயிலில் நுழைந்தால், வலப்பக்கத்தில் அம்மைக்கு நீராட்ட, நீர்சுரக்கும் அகன்ற கிணறு அமைந்துள்ளது. மேற்கு வாயிலின் வழியே, கோவில் உள்ளே நுழைந்தால் இடப்பக்கம் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. அதையடுத்து சப்த கன்னியர் கோவில் கொண்டுள்ளார். கொண்டத்து காளியம்மன் குண்டத்தின் துவக்கத்தில் அமைந்துள்ள கருட கம்பத்தை வழிபட்டு, கொண்டத்து திருநீற்றை அணிந்து கொண்டு, அம்மையின் கோவிலுக்கு நுழையும் முன், சிங்கவாகனம் காட்சியளிக்கும். சிங்கவாகனம் அமைந்திருக்கும், அம்மையின் திருக்கோவில், வடக்கு வாயிலையும், கிழக்கு வாயிலையும் இணைக்கும் சுற்று மண்டபம் அமைந்துள்ளது. இதில், 28 துாண்கள் உள்ளன. அந்த துாண்களில் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்ப கிரகத்தில் எழுந்தருளி கோடான கோடி பக்தர்களுக்கு, கொண்டத்து காளியம்மன் அருள்பாலிக்கிறார். அம்மையை அடிபணிந்து வணங்கி, இடம் இருந்து வலமாக வந்தால், கர்ப்ப கிரகத்தின் இடப்பக்கம் ஐம்பொன்னாலான உற்சவ மூர்த்தியாகிய, சின்னம்மன் சன்னதி உள்ளது. அம்மனை வணங்கி வலம் வந்து, மீண்டும் அம்மையை வணங்கி கிழக்கு வாயில் வழியாக, வெளியே வந்து வெளிமண்டபத்தில் அமர்ந்து, அம்மையின் அருள்பிரசாதம் பெறுவர்.

தினமும் ஆறு கால பூஜை: கோவிலில் தினமும் காலை, 6:00 மணிக்கு விழா பூஜை, 9:00 மணிக்கு காலை சந்தி பூஜை, 10:30 மணிக்கு சிறுகாலை சந்தி பூஜை, மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, 5:00 மணிக்கு மாலை பூஜை, இரவு, 7:00 மணிக்கு அர்த்தசாம பூஜை என, மொத்தம் ஆறு கால பூஜை நடக்கும் கோவிலாக திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !