உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடமிட்ட பெண் சபரிமலையில் தரிசனம்: தொடரும் கேலிக்கூத்து

வேடமிட்ட பெண் சபரிமலையில் தரிசனம்: தொடரும் கேலிக்கூத்து

சபரிமலை: சபரிமலையில் தரிசனம் நடத்தியதாக கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் மஞ்சு 36, அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட படங்களை ஒப்பிடும் போது வேடமிட்டு வந்து தரிசனம் செய்தது தெரிய வந்துள்ளது. மார்க்சிஸ்ட் ஆட்சியில் சபரிமலை கேலிக்கூத்தாகிறது என்று பக்தர்கள் வேதனைப் படுகின்றனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்  பெண்கள் இது தேவையில்லை, 50 வயது வரை காத்திருக்க தயார் என்று சொல்லாமல் சொல்லி விட்டனர். எனினும் பெயர் எடுக்க விரும்பும் சிலர் மட்டும் சபரிமலை வந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் பிந்து, கனகதுர்கா என இரு பெண்களை அதிகாலை தரிசனம் செய்ய வைத்து சபரிமலை ஐதீகத்தை மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் தகர்த்தார். அந்த பெண்கள் நெற்றியில் குங்குமம், சந்தனம் இன்றி நாடகமாக இந்த தரிசனம் நிகழ்த்தப்பட்டது.

அதன் பின்னர் பம்பை முதல் சன்னிதானம் வரை பெண்களை தடுக்க பக்தர்கள் தயாராக நிற்கின்றனர்.  இந்நிலையில் கொல்லம் சாத்தனுாரை சேர்ந்த மஞ்சு, கடந்த ஜன., 8 காலை 7:30 மணிக்கு சன்னிதானத்தில் தரிசனம் செய்ததாக அவரது முகநுாலில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பக்தை போன்ற படத்தில் வயதான தோற்றம் இருந்தாலும் அவரது உண்மையான படத்தில் இளைமையாக காட்சி தருகிறார்.  இதன் மூலம் அவர் மாறுவேடத்தில் வந்து தரிசனம் செய்தது தெரிகிறது. மஞ்சு தலித் பெண்கள் அமைப்பில் நிர்வாகியாக உள்ளார். இதற்கு முன் இவர் தரிசனம் நடத்த முன் வந்த போது பக்தர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர். மாறுவேடத்தில் வந்து தரிசனம் என்ற கேலிக்கூத்துக்கு சபரிமலை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பும் மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன்தான் என்று பக்தர்கள் கூறுகின்றனர். எனினும் மஞ்சுவின் தரிசனம் பற்றி அரசும், தேவசம்போர்டும், போலீசும் மவுனம் காக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !