அங்காளம்மன் பூத வாகனத்தில் வீதியுலா
புதுச்சேரி :அங்காளம்மன் கோவிலில், பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நேற்று நடந்தது. புதுச்சேரி, சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 35ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினசரி காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், மாலையில், அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடக்கிறது. நேற்று அம்மன் பூத வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று இரவு ரிஷப வாகனத்திலும், 23ம் தேதி காமதேனு வாகனத்திலும், 24ம் தேதி யானை வாகனத்திலும், 25ம் தேதி சிம்ம வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி மதியம் தேர் புறப்பாடும், 6 மணிக்கு நரிமேடு மயானத்தில் மயானக் கொள்ளை நிகழ்ச்சியும் நடக்கிறது. 27ம் தேதி குதிரை வாகனத்திலும், 28ம் தேதி அதிகார நந்தி வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. 29ம் தேதி காலை 9 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரையில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு கற்பக விருட்ச வாகன வீதியுலா நடக்கிறது. அடுத்த மாதம் 7ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 11ம் தேதி பல்லயம் நிகழ்ச்சியுடன் பிரம்மோற் சவம் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன், ஆலய அர்ச்சகர் பாலசுப்ரமண்ய குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.