பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி நடப்பட்ட திருக்கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர். பொள்ளாச்சி, மாரியம்மன் கோவிலில் கடந்த 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தேர்த்திருவிழா துவங்கியது. இதையொட்டி, நேற்றுமுன்தினம் இரவு 10.00 மணிக்கு கோவில் முன்பு "திருக்கம்பம் நடப்பட்டது. முன்னதாக, பொள்ளாச்சி நியூஸ்கிம் ரோட்டிலுள்ள கரியகாளியம்மன் கோவிலில் இருந்து, பூஜிக்கப்பட்ட "கம்பம் தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, சிறப்பு வழிபாட்டிற்கு பின் நவதானியங்கள் கட்டப்பட்டு, மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கம்பம் நடப்பட்டது. கோவில் முன் வைக்கப்பட்ட திருக்கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். தொடர்ந்து, வரும் 28ம் தேதி கம்பத்தில் கோவில் சார்பில் பூவோடு வைக்கப்படுகிறது. வரும் 2ம் தேதி முதல் பொதுமக்கள் சார்பில் ஒவ்வொரு பகுதியை சேர்ந்த மக்களும் பூவோடு எடுத்து அம்மனுக்கு நேர்த்திகடனை செலுத்துகின்றனர். பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி வரும் 6ம் தேதியுடன் நிறைவடைகிறது.