வீ.சத்திரம் கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, சி.என். கல்லூரியில் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பழமையான கோவில்களில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. 200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு, இணையாக மார்கழி மாதத்தில் இக்கோவில் திருவிழா விமரிசையாக நடக்கும். கோவில் சிறியதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்ததால், கோவிலுக்கு அருகிலுள்ள இடத்தில், புதிய கோவில் அமைக்கும் பணி, 2005ல் துவங்கியது. கோவில் பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், பழைய கோவில் அகற்றப்பட்டது. புதிய கோவில் கும்பாபிஷேகம், மார்ச் 4ம் தேதி நடக்கிறது. பொதுமக்கள் ஒத்துழைப்புடன், கோவில் கும்பாபிஷேக பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில் கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால், சி.என். கல்லூரியில் பிரம்மாண்டமான அன்னதான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றனர்.