முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் திருவிழா
வத்தலக்குண்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அரிவாள் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவிழாவில் நேற்று அதிகாலை பக்தர்களால் நுாற்றுக்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு அன்னதானம் நடந்தது. மாலையில் பூஜாரிகள் கூல்சாமி, ராமசாமி, பாலு ஆகியோர் நேர்த்திக் கடன் செலுத்தப்படும் அரிவாள்களுக்கு பூஜை நடத்தினர். இரவு 7:00 மணிக்கு அரிவாள்கள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கருப்பணசாமிக்கு செலுத்தப்பட்டது. ஊர்வலத்தின் போது பக்தர்கள், சாமியாடி வந்தவர்களிடம் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி கால்களில் விழுந்து வரம் கேட்டனர். நினைத்த காரியம் நிறைவேறியதும் கருப்பணசாமிக்கு 3 அடி முதல் 15 அடி உயரம் வரை அரிவாள்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அரிவாள்களை ராஜகோபால், பெரியதம்பி, முருகன், தங்கவேல், சண்முகம் ஆகியோர் மார்கழி மாதத்திலிருந்து விரதமிருந்து செய்தனர்.